இயற்கை வளம் காப்போம்
இயற்கை வளம் காப்போம்
இயற்கை என்ற சொல் அழகானது, ஆனந்தமானது, மகிழ்ச்சியை தரக்கூடியது. இயற்கை வளங்கள் என்பவை மனித சமுதாயத்திற்கு இறைவனின் கொடையாகவே கருதலாம். இயற்கை அன்னை பல வளங்களை தன்னுள்ளே பெற்று உலகம் வாழ வழிவகை புரிகிறது என்றால் அது மிகையாகாது. இயற்கை வளங்கள் என்பது மனிதர்கள், விலங்குகள், தாவரங்கள், காடுகள், மலைகள், அருவிகள், நதிகள், கடல்கள், கனிம வளங்கள், வளிமண்டலத்தில் உள்ள நீர், காற்று, சூரிய ஒளி மற்றும் சக்தி அளிக்கும், வளங்கள் என அனைத்தும் உள்ளடக்கியதாகும்.
இயற்கை வளங்களின் சீரழிவு காரணத்தினால் இனி வரும் காலங்களில் பெரும் இயற்கை சீற்றங்கள் ஏற்படும் அபாய நிலையில் சமுதாயம் உருண்டோடி கொண்டிருக்கிறது என்பது கசப்பான உண்மை. ஆகவே “பாதுகாப்பு உயிரியல்” பாடத்தின் படி, அதாவது இயற்கை மற்றும் பூமியின் நிலை மாறுபாடுகளைப் பொருத்து உயிரினங்களையும் அவற்றின் வாழ்விடங்களையும் சுற்றுப்புற சூழல்களையும் அதிகமான விகிதத்தில் அழிவதை அறிவியல் முறையில் ஆராயும் தன்மையாகும். குறிப்பாக வாழ்விடங்களை பாதுகாக்கும் முறை என்பது நலங்களை பாதுகாத்து கண்காணிக்கும் முறையில் காட்டு விலங்குகள், காட்டு தாவரங்கள், உயிரின வகைகள் அவற்றினை அழிவிலிருந்து காப்பதாகும். உலக நாடுகளில் ஏழாவது மிகப் பெரியநாடான “இந்தியா” தனது நிலப்பரப்பினை 3,287,267 சதுர கிலோ மீட்டர்கள் கொண்டதாகும். மேலும் இதன் நிலப்பரப்பானது வடக்கிலிருந்து தெற்கு வரை 3,214 கி.மீ கிழக்கிலிருந்து மேற்கு வரை 2,993 கி.மீ. தூரம் கொண்டதாகும். அளவற்ற இயற்கை வளம் கொண்ட இந்தியா தாதுப் பொருட்கள் வளத்திலும் அதிக விவசாய நிலங்களும், நீர்வளங்களான கங்கா, யமுனா, பிரம்மபுத்திரா, காவிரி போன்ற சீர்மிகு நதிகளும், வற்றாத வளமையும் செழுமையும் கொண்ட இந்தியாவில் இன்னும் மக்கள் ஏன் வறுமையின் பிடியில் இருக்கிறார்கள் என சிந்தித்து செயல்படுவது அறிவுடைமையாகும்.
இயற்கை வளங்கள் குறித்தும், பாதுகாப்பதும், முறையாக பயன்படுத்துவதும் இன்றைய அறிவியல் வளர்ந்தநிலையில் மிக மிக அவசியம் அவசரம் என்பதை உணர்ந்து அறிந்து, செயல்படுவோம்.
பொதுவாக இயற்கை வளங்களை பல்வேறு அடிப்படைகளில் வகைப்படுத்தலாம். இயற்கை வளங்கள் மனிதனுக்கும் விலங்குகளுக்கும் அனைத்து விதமான நன்மைகளைத் தரும் கற்பகத்தரு என்றால் அது மிகையாகாது. இன்றைய அறிவியல் மேலோங்கியநிலையில் இயற்கை மேம்பாடு மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பில் வளங்களின் பங்கு அளவிடமுடியாத ஒன்றாகும். குறிப்பாக வன வளங்கள் மனித வாழ்க்கையின் அடிப்படை வாழ்வாதாரத்திற்கு (உணவு மற்றும் உறைவிடம்) வழி வகை செய்வது மட்டுமல்லாமல், பூமியின் தட்பவெப்ப நிலை மற்றும் பருவ மழை ஆகியவற்றை நிர்ணயிக்கும் சக்தியாக விளங்கி வருகிறது என்றால் அது மிகையாகாது. காடுகள் நீர் வளத்திற்கு ஆணிவேராக உள்ளது. மழைக்கு ஆதாரம் காடுகள் என்றால் அது மிகையாகாது. மனித இனத்தின் மிகத்தொன்மையான சின்னங்களாக விளங்குபவை காடுகள். காடுகள் பற்றி பழமொழி உண்டு. “காடு நிறைந்தால் வீடு நிறையும்” என்பார்கள்.
மனித சமுதாயத்திற்கு நீர் இன்றியமையாத ஒரு இயற்கை வளமாகும். நீரின் பயன்களும் படிப்படியாக அதிகரித்துக்கொண்டே வருகிறது. ஒரு நாட்டின் பொருளாதாரமே அதன் நீர்வளத்தை சார்ந்துள்ளது. உலக உயிரினங்கள் உயிர் வாழ நீர் மிகவும் அவசியமானதாகும். நீரானது சுற்றுச்சூழல் பாதுகாப்பதில் முக்கிய பங்கு வகிக்கின்றது. நீரின் மேன்மையை உணர்த்துகின்ற வகையில் வான்புகழ் வள்ளுவப் பெருந்தகை, “நீர் இன்றி அமையாது உலகு” என்கிறார். அதாவது நீர் இல்லாமல் உலக வாழ்க்கை இல்லை, மழை இல்லாமல் நீர் உண்டாகாது என்று குறிப்பிடுகிறார்.
நமது நாட்டில் ஏராளமான இயற்கை வளங்கள் பெருகி இருந்தும், முறையாக பயன்படுத்தாத காரணத்தால் பெரும்பாலான மக்கள் மிகவும் ஏழைகளாக வாழ்கிறார்கள். இத்தகைய சூழ்நிலை மிகவும் கொடுமையான ஒன்றாகும்.
நமது நாட்டில் ஓடும் நதிகளில் 80 சதவீதம் நீர் வீணாகக் கடலில் சென்று கலந்து விடுகிறது. இதனால் நாட்டின் பல பகுதிகளில் மக்கள் அவதியுறுகின்றனர். இயற்கையின் பல வகைகளில் நீரை வீணாகச் செலவழிப்பதைக் கட்டுப்படுத்தி வருங்கால சந்திக்கும் தேவையான நீரை சேர்த்து வைக்க ஆவன செய்தல் வேண்டும். “மழை நீரை சேமியுங்கள் மகிழ்ச்சியாக வாழ வழிவகை செய்யுங்கள்”
கனிம வளங்கள் உலோக வகை, உலோகம் சாரா வகை எதுபொருள் என வகைப்படுத்தப்பட்டுள்ளது. பொதுவாக கனிமங்கள் என்றால் அவற்றில் அலுமினிய பாக்ஸைட், குரோமியம், கார்பனேட், ஜெர்மானியம் இண்டியம், அயோடின் தகரம் மற்றும் டைட்டானியம் ஆகியவை அடங்கும் கனிம வளங்கள் நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் பெரும் பங்காற்றினாலும் பாதுகாப்பான முறையில் கையாள்வது அறிவுடமையாகும்.
உணவு வளங்கள் மனிதன் உயிர் வாழ இன்றியமையாததாகும் பெருகி வரும் மக்கள் தொகையினை கருத்தில் கொண்டு, நவீன விவசாய உற்பத்தி பெருக்க தொழில்நுட்ப முறைகளை மேற்கொள்வது காலத்தின் அவசியம். ஆற்றல் வளங்கள் குறிப்பாக புதுப்பிக்கக்கூடிய புதுப்பிக்க இயலாத ஆற்றல் வளங்கள் என்று வகைப்படுத்தாலாம். பல ஆற்றல் வளங்களை பெற்றிருந்தாலும் இயற்கையையும் அதன் வளத்தையும் பாதுகாத்து, வலிமையான வளமையான இந்தியாவை உருவாக்க அனைவரின் பங்களிப்பு என்பது அளப்பரியது. ஆற்றல் மிக்கது. இதுவே அறிவுடைமை என்றால் அது மிகையாகாது.
நம் வாழ்வாதாரத்தில் நீரின் தேவை முக்கிய அங்கமாக இருக்கிறது. அக்காலத்தில் குளம், எரி,கண்மாய், என பல வகையிலும் நீரை சேமித்து வைத்து இருந்தோம். இன்று எரி, குளம் இருந்த இடங்களில் கட்டிடங்கள் நிரம்பியதால், நீரை சேமிக்கும் வழியே இல்லாமல் போகிறது.
ஆனால் இன்றோ. ஆறுகளில் உள்ள நீரையும் சேமிக்காமல் கடலுக்குள் சென்று கலப்பதற்கே வழிவகை செய்து இருக்கிறோம்.
அப்படியே கடலில் கலந்தாலும் சுத்தமான மழை நீராக கலப்பதில்லை. தொழிற்சாலைகளில் கழிவுகளும், மக்களால் கொட்டப்படும் குப்பைகளும், நெகிழிகளும் ஒன்றாக கலந்து மாசடைந்த நீராகவே கடலில் கலக்கிறது. இதனால் நீர் மாசடைவது மட்டுமில்லாமல் கடலில் வாழும் உயிரினங்களும் பாதிப்படைகின்றன என்பதை கவனிக்க தவருகின்றோம்.
பாதுகாக்கும் வழிமுறைகள்
குளங்களும் , ஏரிகளும் முறையாக தூர்வாரப்பட்டு, நீர் இருந்தால் ஆகாயத் தாமரைகள் படரவிட்டு சேமித்து வைக்க முடியும்.
ஒவ்வொரு வீட்டிலும் நீரை மறுசுழற்சி செய்து பயன்படுத்தலாம் அல்லது தோட்டங்கள் அமைத்து வீணாகும் நீரை அதற்குப் பயன்படுத்தலாம்.
சில தொழிற்சாலைகள் கழிவுகளை மறுசுழற்சி செய்து பயன்படுத்தினாலும், பல தொழிற்சாலைகள் கொட்டாக்கூடாத சாயக்கழிவுகளையும் சேர்த்தே ஆற்றில் கொட்டுகின்றனர். இதனால் மனிதர்களுக்கு பல நோய்கள் வருவதோடு மட்டுமில்லாமல், நீரில் வாழும் சிறு உயிரினங்களும் ,மீன்களும் இறக்கின்றன.
மழைநீர் சேகரிப்பு என்பது தனிப்பட்ட நபரின் தொடங்கி, நாடு முழுவதும் கொண்டு வர வேண்டிய அவசியமான திட்டங்களில் ஒன்றாகும்.
“தூய்மை இந்தியா” என்று கொண்டு வந்தாலும், ஆற்றில் கொட்டும் குப்பைகளின் அளவை கணக்கெடுக்க முடியவில்லை. இதற்கு ஒரு வகையில் அரசும் காரணமாகிறது. தரம் பிரித்து கொட்டும் குப்பைகளை மறுசுழற்சி செய்து பயன்படுத்துவது என்பது நம் நாட்டில் ஒரு சில இடங்களில் மட்டுமே உள்ளன. அதனை மேம்படுத்த யாருமே முன் வருவதில்லை.
ஆறுகள் சரியாக தூர்வாரினால், மழை பெய்யும் போது ,போதுமான நீரைச் சேமிக்க முடியும். ஆனால், நிலைமை, ஆற்றோரப் பகுதியில், மணல் அள்ளி அந்த வளங்களும் சுரண்டப்பட்டு வருகின்றன.
Comments
Post a Comment